
கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று (12) நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தகவல்களை வழங்கியுள்ளது.
நேற்று, பொலிஸாரின் உத்தரவை மீறி தப்பி ஓடிய ஒரு கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
சம்பந்தப்பட்ட கார் சந்தேக நபர் திருடிவிட்டு தப்பிச் சென்ற கார் என்பது தெரியவந்துள்ளது.
நேற்று இரவு, கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் தனது கர்ப்பிணி மனைவி மற்றும் தாயாருடன் காரில் வந்த ஒருவர், காரின் என்ஜினை இயங்கச் செய்து விட்டு, உணவு வாங்குவதற்காக ஒரு உணவகத்திற்குச் சென்றுள்ளார்.
அந்த நேரத்தில், சந்தேக நபர், ஓட்டுநரின் மனைவி மற்றும் தாயார் உள்ளே இருந்தபோது ஸ்டார்ட் செய்யப்பட்ட காரைத் திருடிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
அந்த நேரத்தில், கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்கு விசாரணைக்காக வந்த மட்டக்குளி பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு, இந்த கார் திருடப்பட்டது தொடர்பான தகவலைப் பெற்றவுடன் உடனடியாக நடவடிக்கை எடுத்து, தப்பிச் சென்ற காரை துரத்திச் சென்று நிறுத்துமாறு சமிக்ஞை செய்தனர்.
இருப்பினும்,பொலிஸாரின் உத்தரவை மீறி சந்தேக நபர் காரை தொடர்ந்து ஓட்டிச் சென்றதால், அதிகாரிகள் தங்கள் துப்பாக்கிகள் மூலம் இருந்து இரண்டு தடவைகள் சுட்டு, கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவில் உள்ள ப்ளூமெண்டல் ரயில் பாதைக்கு அருகில் காரை நிறுத்தி பிடித்தனர்.
அதிகாரிகள் காரை நெருங்கியபோது சந்தேக நபர் காரில் இருந்து இறங்கி தப்பி ஓடிவிட்டார், மேலும் காரில் இருந்த இரண்டு பெண்களுக்கு காயம் ஏற்படவில்லை என்று பொலிஸார் கூறுகின்றனர்.
தப்பியோடிய சந்தேக நபரைக் கைது செய்ய கொட்டாஞ்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.