
மாற்றத்தை வேண்டி தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்த மக்கள் 06 மாத காலத்துக்குள் பெருத்த ஏமாற்றத்தை சந்தித்துள்ளார்கள் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், வர்த்தக மற்றும் கைத்தொழில் துறை முன்னாள் அமைச்சருமான றிசாத் பதியுதீன் நிந்தவூரில் தெரிவித்தார்.
நிந்தவூர் பிரதேச சபைக்கு போட்டியிடுகின்ற மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களை அறிமுகம் செய்கின்ற கன்னி பிரசார ஆதரவு கூட்டம் திங்கட்கிழமை இரவு இடம்பெற்றது. இதில் பேராளராக கலந்து கொண்டு பேசியபோது றிசாத் பதியுதீன் மேலும் தெரிவித்தவை வருமாறு
75 வருட கால தவறை திருத்துங்கள் என்கிற கோஷத்துடன் வந்த தேசிய மக்கள் சக்திக்கு மாற்றத்தை வேண்டி மக்கள் திரண்டு வாக்களித்தார்கள். ஆனால் 06 மாத காலத்துக்குள் பெருத்த ஏமாற்றத்தை அடைந்து விட்டார்கள்.
எம்மவர்களும் வாக்களித்து விட்டு ஏன் இந்த தவறை செய்தோம்? என்று இன்று ஏங்கி கொண்டிருக்கின்றனர். ஏனென்றால் இந்த 06 மாத காலத்துக்குள்ளேயே எவ்வளவோ இனவாத போக்கோடு அரசாங்கம் நடந்து கொண்டிருக்கின்றது.
பழைய கோத்தாபய அரசாங்கம் இனவாதத்தை நேரடியாக கக்கியது. நமது சமூகத்தை நேரடியாக பழி வாங்கியது.அவர்களுக்கு கிடைத்திருந்த வெற்றி பயன் அற்று போய் விட்டது கண்கூடு.
நிந்தவூர் பிரதேச சபை இந்நாட்டுக்கே முன்மாதிரியான பிரதேச சபை. எல்லா வகையிலும் முதன்மையான பிரதேச சபை. இதன் தவிசாளராக இருந்து நாடளாவிய ரீதியில் இதை முதலாவது பிரதேச சபையாக கொண்டு வந்தவர் தற்போதைய எமது எம். பி அஷ்ரப் தாஹீர்.
அவர் விட்டு சென்ற இடத்தில் இருந்து தொடர்ந்து சேவைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அதற்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு எந்த நிபந்தனையும் இல்லாமல் நிந்தவூர் மக்கள் ஆதரவு வழங்க வேண்டும். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சபையாக நிந்தவூர் பிரதேச சபையை தந்து அபிவிருத்திகளை பெற வேண்டும்.