அமெரிக்காவில் ஹெலீன் புயலால் ஏற்பட்ட பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 227-ஆக அதிகரித்துள்ளது.
கரீபியன் கடற்பகுதியில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அதிதீவிர புயலாக உருமாறியது. ஹெலீன் என்று பெயரிடப்பட்ட அந்தப் புயல், கடந்த செப். 26-ஆம் திகதி அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தை தாக்கியது.
அதன் பின்னா் அந்தப் புயல் வடக்கு திசையை நோக்கி நகா்ந்தது.புயலால் ஃபுளோரிடா, வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா, ஜியாா்ஜியா உள்ளிட்ட மாகாணங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
புயல் காரணமாக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மழை பெய்து கடும் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் அங்குள்ள வீடுகள், சாலைகள், மின்சார கட்டமைப்புகள், கைப்பேசி சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
புயல் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 225-ஆக இருந்த நிலையில், மேலும் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டன. இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 227-ஆக அதிகரித்தது. உயிரிழந்தவா்களில் கிட்டத்தட்ட பாதி போ் வடக்கு கரோலினாவை சோ்ந்தவா்கள்.
கடந்த 2005-ஆம் ஆண்டு அமெரிக்காவை தாக்கிய கட்ரினா புயலுக்குப் பிறகு அந்நாட்டை தாக்கிய புயல்களில் மிக மோசமானது ஹெலீன் புயல் என்று கூறப்படுகிறது.