
மியன்மார் நாட்டின் மண்டாலே நகரருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிச்டரில் 7.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்திற்கு பின்பும் தொடர்ந்து நிலநடுக்க அதிர்வுகள் ஏற்பட்டன. இதனால் கட்டிடங்கள் பல அடியோடு சரிந்தன.
வரலாற்றுச் சிறப்புமிக்க துறவிகளுக்கான மடாலயமும் இதனால் பாதிக்கப்பட்டது. 2 பாலங்கள் இடிந்து விழுந்தன. 5 நகரங்கள் கட்டிட இடிபாடுகளைச் சந்தித்துள்ளன.
இந்நிலையில், மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 1644 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 3000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
மியான்மரில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இதேபோல், தாய்லாந்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. மியன்மார் மற்றும் தாய்லாந்து நாடுகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.