தேசிய பாதுகாப்பு பலவீனமாகியுள்ளதாக நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளமை அடுத்த கட்டத்திற்கான ஆரம்பமாகவும் இருக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும், சட்டம் போட்டுத் தடுக்கிற கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்கும், திட்டம் போட்டுத் திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்கும் என்பது சினிமாப் பாடலடியாகும். அந்தப் பாடலின் பொருள் மீண்டும் கொழும்பு நீதிமன்ற வளாகத்துள் நிறைவேறியுள்ளது.

அதாவது 19.02.2025 திகதியில், நீதிமன்றத்தினுள் போலியான சட்டத்தரணி வேடத்தில் இலாவகமாக நுழைந்த கொலையாளி, கொலைத் திட்டத்தினை கச்சிதமாக நிறைவேற்றியுள்ளார்.

தப்பியும் சென்றுள்ளார். அந்தவகையில் கணேமுல்ல சஞ்ஜீவ என்னும் பாதாளக் கும்பல் தலைவனை ஆறு தடவைகள் றிவோல்வரினால் சுட்டு கொலையினை உறுதிப்படுத்தி விட்டுத் தப்பியுள்ளார்.

தற்போது அவர் புத்தளம் பாலாவியில் கைது செய்யப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது.

எது எப்படியாக இருந்தாலும், பலத்த பாதுகாப்பு வேலிகளைக் கடந்தமை, கொலையினை நிறைவேற்றியமை, பின்னர் தப்பிச் சென்றமை என்பது பாதாளத் தரப்பினரின் நுட்பரீதியான பலத்தையும், பாதுகாப்புத்துறையின் பலவீனத்தையும் அப்பட்டமாகக் காட்டுகின்றது.

இந்த நிலையில், மேலுமோர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் மீத்தொட்டுவப் பகுதியில், அதே தினம் நடைபெற்றுள்ளது. இதில் தந்தை உட்பட இருபிள்ளைகள் கொல்லப்பட்டுள்ளனர்.

எனவே, வேட்டைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்புகளையும் உறுதி செய்ய வேண்டியுள்ளது.

பாதுகாப்பு அமைச்சானது இதற்கான நடவடிக்கையினைத் துரிதமாக எடுக்க வேண்டிய தேவையுள்ளது. காலம் தாமதிக்காமல் பாதுகாப்பு அமைச்சர் செயலாற்ற வேண்டும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.

தேசிய பாதுகாப்பு பலவீனமாகியுள்ளதாக நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளமை அடுத்த கட்டத்திற்கான ஆரம்பமாகவும் இருக்கலாம். பட்டறிவுகளைப் பகிர வேண்டிய காலமிதுவாகும்.

ஆட்சி மாற்றத்திற்கான அகராதி என்பது தேசிய பாதுகாப்பாக அமைகின்றது என சுட்டிக்காட்டியுள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *