
நாட்டில் தற்போது 80 வகையான மருந்துகளுக்கான விநியோகஸ்தர்கள் இல்லையென்றும் ஒரேயொரு விநியோகஸ்தர் மட்டுமே தற்போது இருப்பதாகவும் மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்தார்.சுகாதார நிபுணர்களின் தேசிய இயக்கம் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,‘‘தற்போது 80 வகையான மருந்துகளுக்கான விநியோகஸ்தர்கள் இல்லை.
இருப்பதோ ஒரேயொரு விநியோகஸ்தர் மட்டுமே என்பதை சுகாதார அமைச்சின் வைத்திய விநியோகப்பிரிவு ஏற்றுக்கொண்டுள்ளது. அதாவது, தற்போது நாட்டில் மருந்து விநியோக பொறிமுறையும் ஒழுங்குமுறைமையும் பாரிய ஆபத்திலுள்ளது.
துரதிர்ஷ்டவசமாக, இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்கும் முறை தொடர்பில் கணக்காய்வாளர் தொடர்ந்து பரிந்துரைகளை முன்வைத்திருந்தபோதும் இதுவரையில் அதிகாரிகள் அதற்கு தயாராக இல்லை என்பது கோப் குழுவில் தெளிவாக அறிவிக்கப்பட்டது.
அதற்கு சிறந்த உதாரணம் சர்ச்சைக்குரிய கண் சொட்டு மருந்தினால் 100 150 வரையான நோயாளர்கள் வாழ்நாள் முழுவதும் மற்றும் தற்காலிக கண் பார்வை பாதிப்புக்குள்ளாகின்றனர்.
இன்றும் அந்த நிறுவனத்தை தடை செய்வதற்கு சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. அவர்கள் அதனை செய்யவும் மாட்டார்கள்.
சுகாதார அமைச்சர் நளிந்த திசாநாயக்கவாக இருந்தாலும் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்லவின் காலத்தின் அவதாரம் இன்றும் தொடர்கிறது’’ என்றார்