
மதுபானம் அருந்த சென்ற நான்கு நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட வாய்தர்கத்தையடுத்து ஒருவர் மீது மூன்று பேர் பொல்லால் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்றையதினம்(14) மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள சின்னவத்தை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
வெல்லாவெளி சின்னவத்தை பக்கியெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய புவனேந்திரராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,சின்னவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த உயிரிழந்த புவனேந்திரராசா சம்பவதினமான நேற்று பகல் 12 மணியளவில் அவருடைய 3 நண்பர்களுடன் சின்னவத்தை பகுதியிலுள்ள வயல்பகுதிக்கு சென்று ஒன்றாக இருந்து மதுபானம் அருந்தியுள்ளார்.
இந்த நிலையில் குறித்த நண்பருக்கும் ஏனைய 3 நண்பர்களுக்கும் இடையே வாய்தர்கம் ஏற்பட்டதையடுத்து அவர் மீது 3 பேரும் சேர்ந்து பொல்லால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
அந்த வயல்பகுதிக்கு மாலை வேளை சென்ற கிராம உத்தியோகத்தர் சடலம் ஒன்று இருப்பதைகண்டு தெரியப்படுத்தியதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து நீதிமன்ற அனுமதியை பெற்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்ததுடன் குறித்த நண்பரை தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டின் பெயரில் 3 நண்பர்களையும் கைது செய்துள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.