பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது T20 போட்டியில் இந்திய அணி 86 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகளைக் கொண்ட தொடரினை இந்திய அணி 2:0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் 9 விக்கெட்களை இழந்து 221 ஓட்டங்களை பெற்றது.
இந்திய அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக நிதிஷ் குமார் ரெட்டி 34 பந்துகளில் 74 ஓட்டங்களைப் பெற்றார்.
மேலும் இந்திய அணி சார்பில் ரிங்கு சிங் 29 பந்துகளில் 53 ஓட்டங்களையும் ஹர்திக் பாண்டியா 19 பந்துகளில் 32 ஓட்டங்களையும் பெற்றார்.
பங்களாதேஷ் அணி சார்பில் பந்துவீச்சில் ரிஷாத் ஹொசைன் 3 விக்கெட்டுக்களையும் தஸ்கின் அகமது,தன்சிம் ஹசன் சாகிப் மற்றும் முஸ்தாபிசுர் ரஹ்மான் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
222 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 135 ஓட்டங்களை பெற்று தோல்வியைத் தழுவியது.
பங்களாதேஷ் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக மஹ்முதுல்லாஹ் 39 பந்துகளில் 41 ஓட்டங்களைப் பெற்றார்.
மேலும், பங்களாதேஷ் அணி சார்பில் பர்வேஸ் ஹொசைன் எமன் 12 பந்துகளில் 16 ஓட்டங்களையும் மெஹிதி ஹசன் மிராஸ் 16 பந்துகளில் 16 ஓட்டங்களையும் பெற்றார்.
இந்திய அணி சார்பில் பந்துவீச்சில் நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டுக்களையும் வாஷிங்டன் சுந்தர், அபிஷேக் சர்மா, மயங் யாதவ், ரியான் பராக் மற்றும் அர்ஷ்தீப் சிங் தலா 1 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
இப் போட்டியின் நாயகனாக இந்திய அணி சார்பில் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சில் அசத்திய நிதிஷ் குமார் ரெட்டி தெரிவாகினார்.
இரண்டு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது T20 போட்டி எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறவுள்ளது.