வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கிண்ண தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணி வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கிண்ண தொடரின் இறுதிப் போட்டிக்கு இலங்கை அணி தகுதி பெற்றது.
ஓமான், அல் அமரத் விளையாட்டரங்கில் நடைபெற்ற இப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
இதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 135 ஓட்டங்களைப் பெற்றது.
பாகிஸ்தான் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக ஒமைர் யூசுப் 46 பந்துகளில் 68 ஓட்டங்களைப் பெற்றார்.
மேலும், பாகிஸ்தான் அணி சார்பில் ஹைதர் அலி 15 பந்துகளில் 14 ஓட்டங்களையும் முகமது இம்ரான் 12 பந்துகளில் 33 ஓட்டங்களையும் பெற்றார்.
இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் துஷான் ஹேமந்த 4 விக்கெட்களையும், எஷான் மலிங்கா மற்றும் நிபுன் ரஞ்சிகா தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினார்.
136 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற குறித்த இலக்கு நோக்கி களமிறங்கிய இலங்கை அணி 16.3 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக அஹான் விக்கிரமசிங்க ஆட்டமிழக்காமல் 46 பந்துகளில் 52 ஓட்டங்களைப் பெற்றார்.
மேலும் இலங்கை அணி சார்பில் லஹிரு உதார 20 பந்துகளில் 43 ஓட்டங்களையும் சஹான் ஆராச்சிகே ஆட்டமிழக்காமல் 16 பந்துகளில் 17 ஓட்டங்களையும் பெற்றார்.
பாகிஸ்தான் அணி சார்பில் பந்து வீச்சில் ஷாநவாஸ் தஹானி மற்றும் முகமது இம்ரான் தலா 1 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தினர்.
இப் போட்டியின் நாயகனாக இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் அசத்திய துஷான் ஹேமந்த தெரிவாகினார்.