பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் ஆப்கானித்தான் அணி 92 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி 1:0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 49.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 235 ஓட்டங்களைப் பெற்றது.
ஆப்கானிஸ்தான் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக முஹமது நபி 79 பந்துகளில் 84 ஓட்டங்களைப் பெற்றார்.
மேலும், ஆப்கானிஸ்தான் அணி சார்பில் அணித் தலைவர் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி 92 பந்துகளில் 52 ஓட்டங்களையும் நங்கெயாலியா கரோட் ஆட்டமிழக்காமல் 28 பந்துகளில் 27 ஓட்டங்களையும் பெற்றார்.
பங்களாதேஷ் அணி சார்பில் பந்துவீச்சில் தஸ்கின் அஹமது மற்றும் முஸ்தாபிசுர் ரஹ்மான் தலா 4 விக்கெட்களையும் ஷோரிஃபுல் இஸ்லாம் 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்.
236 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷ் அணி 34.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 143 ஓட்டங்களுக்குச் சுருண்டது.
பங்களாதேஷ் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக அணித் தலைவர் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 68 பந்துகளில் 47 ஓட்டங்களைப் பெற்றார்.
மேலும், பங்களாதேஷ் அணி சார்பில் சௌமியா சர்க்கார் 45 பந்துகளில் 33 ஓட்டங்களையும் மெஹிதி ஹசன் மிராஸ் 51 பந்துகளில் 28 ஓட்டங்களையும் பெற்றார்.
ஆப்கானிஸ்தான் அணி சார்பில் பந்துவீச்சில் அல்லா கசன்ஃபர் 6 விக்கெட்டுகளையும் ரஷீத் கான் 2 விக்கெட்களையும் அஸ்மத்துல்லா உமர்சாய் மற்றும் முஹமது நபி தலா 1 விக்கெட்களையும் வீழ்த்தினார்.
இப் போட்டியின் நாயகனாக ஆப்கானிஸ்தான் அணி சார்பில் பந்துவீச்சில் அசத்திய அல்லா கசன்ஃபர் தெரிவாகினர்.
இரண்டு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.